திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.76 திருஇலம்பையங்கோட்டூர்
பண் - குறிஞ்சி
மலையினார் பருப்பதந் துரத்தி மாற்பேறு
    மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
நிலையினான் எனதுரை தனதுரை யாக
    நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்
    கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1
திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான்
    தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை
நிருமல னெனதுரை தனதுரை யாக
    நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை
    கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
2
பாலனாம் விருத்தனாம் பசுபதி தானம்
    பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங்
காலனாம் எனதுரை தனதுரை யாகக்
    கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய
    நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோங்கும்
ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
3
உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்
    ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல்
விளம்புவா னெனதுரை தனதுரை யாக
    வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக்
    கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
4
தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த்
    தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
வானுமா மெனதுரை தனதுரை யாக
    வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிர லூகங்
    கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
5
மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற
    வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்
தனமிலா னெனதுரை தனதுரை யாகத்
    தாழ்சடை யினமதி தாங்கிய தலைவன்
புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
    பொன்னொடு மணிகொழித் தீண்டவந் தெங்கும்
இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
6
நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்
    நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரை யாக
    ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல றாத
    பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
7
வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை
    வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
ஆரலா மெனதுரை தனதுரை யாக
    ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல்
வாருலா நல்லன மாக்களுஞ் சார
    வாரண முழிதரும் மல்லலங் கானல்
ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
8
கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்
    கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா
உளமழை யெனதுரை தனதுரை யாக
    வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
வளமழை யெனக்கழை வளர்துளி சோர
    மாசுண முரிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
9
உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
    உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்
பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப்
    பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக்
    களிமுக வண்டொடு தேனின முரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
10
கந்தனை மலிகனை கடலொலி யோதங்
    கானலங் கழிவளர் கழுமல மென்னும்
நந்தியா ருறைபதி நால்மறை நாவன்
    நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
    இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
    வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com